⬅ Back to Main Page
Profile Posted by: M Siraj
Other 📍 State: Others 📅 12-11-2026 🕒 01:27 PM 👁️ 31 Views

பத்து ஆண்டுகளாகத் தாயகம் திரும்ப முடியாமல் தவித்த தமிழருக்கு உதவிக்கரம் நீட்டிய ரியாத் தமிழ்ச் சங்கம்!

Featured News Image

சட்டப் பிரச்சினைக்குத் தீர்வு, மருத்துவ உதவி, பாஸ்போர்ட், விமானப் பயணம் என அனைத்தையும் ஏற்பாடு செய்து, சுமார் 7,000 சவூதி ரியால் செலவில் பத்திரமாகத் தாயகம் அனுப்பி வைப்பு.

News Image

ரியாத்: திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் ஜம்புலிங்கம் என்பவர், கடந்த பத்து ஆண்டுகளாகச் சட்டப் பிரச்சினையில் சிக்கித் தாயகம் திரும்ப முடியாமல் சவூதி அரேபியாவில் தவித்து வந்தார். அவரது நிலையை அறிந்த இந்தியத் தூதரகத்தின் வேண்டுகோளை ஏற்று, ரியாத் தமிழ்ச் சங்கம் அவருக்கு உதவிக்கரம் நீட்டி பத்திரமாகத் தாயகம் அனுப்பி வைத்துள்ளது.

• மற்றொருவருக்காக ஜாமீன் நின்றதால், சுமார் 10,000 சவூதி ரியால் தொடர்பான வழக்கில் சிக்கிய கிருஷ்ணன், வேலை, வருமானம், உணவு மற்றும் தங்குமிடமின்றி கடும் சிரமங்களைச் சந்தித்தார்.

• சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ உதவியும் தேவைப்பட்டது.

• ரியாத் தமிழ்ச் சங்கம் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து, சட்டப் பிரச்சினையிலிருந்து விடுபட நடவடிக்கை மேற்கொண்டது.

• இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் புதிய பாஸ்போர்ட் பெற்றுத் தரப்பட்டது.

• மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதுடன், ஸ்பான்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிப் பயண அனுமதியும் (Final Exit) பெற்றுத் தரப்பட்டது.

• சங்கத்தின் சார்பில் சகோதரர் ஜமால் சேட், சட்ட நடவடிக்கைகள் முதல் மருத்துவம் மற்றும் பயண ஏற்பாடுகள் வரை அனைத்தையும் நேரடியாக ஒருங்கிணைத்தார்.

• ரியாத்திலிருந்து தம்மாம் விமான நிலையத்திற்குத் தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, 09.11.2026 அன்று அங்கிருந்து ஓமன் ஏர்வேஸ் மூலம் மஸ்கட் வழியாக சென்னை செல்ல விமானப் பயணச்சீட்டு வழங்கப்பட்டது.

• சிறுநீரகப் பாதிப்பு காரணமாக யூரின் பேக் மற்றும் சக்கர நாற்காலியுடன் பயணிக்க வேண்டியிருந்ததால், அவருக்குத் துணையாக ஒருவரும் ஏற்பாடு செய்யப்பட்டார்.

• சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று தொடர்ந்து சிகிச்சை பெற ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டது.

• வழக்கறிஞர் கட்டணம், சட்ட நடவடிக்கைகள், பாஸ்போர்ட், மருத்துவம், விமானப் பயணம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்காகவும் சங்கம் சுமார் 7,000 சவூதி ரியால் செலவிட்டுள்ளது.

ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதநேயப் பணியில், ஜமால் சேட்டின் அர்ப்பணிப்பான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

தாயகம் திரும்புவதற்காகப் புறப்பட்டபோது, தனக்கு உதவிய சங்கத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் குறிப்பாக ஜமால் சேட் ஆகியோருக்கு கிருஷ்ணன் ஜம்புலிங்கம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளாகத் தாயகம் திரும்ப முடியாமல் தவித்த ஒருவருக்கு உறவாகவும், உற்ற துணையாகவும் இருந்து அவரைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இப்பணி, வெளிநாட்டில் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவுவதில் அதன் மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்பையும் மீண்டும் பறைசாற்றியுள்ளது.

M Siraj