⬅ Back to Main Page
Profile Posted by: M Siraj
Other 📍 State: Others 📅 09-09-2026 🕒 05:56 AM 👁️ 98 Views

வளர்ந்த பாரதம் 2047” இலக்கில் புலம்பெயர் இந்தியர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்

Featured News Image

ரியாத்: வளமான, தன்னிறைவு பெற்ற, உலக அளவில் வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் “விக்ஸித் பாரத் 2047” தொலைநோக்குப் பார்வை நனவாக்குவதில் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் மேலும் தீவிரமாக பங்களிக்க வேண்டும் என மத்திய வெளியுறவு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

News Image

ரியாத் சர்வதேச இந்தியப் பள்ளியில் (IISR) நடைபெற்ற இந்திய சமூக வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்குகளில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் முக்கிய பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார். இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் அகில இந்திய வழிகாட்டு குழு சார்பில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியா–சவுதி அரேபியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்திய புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்தியர்கள் முக்கிய பாலமாக திகழ்வதாக அவர் கூறினார்.

“இந்தியா–சவுதி அரேபியா இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்துவதிலும் வளப்படுத்துவதிலும் நீங்கள் உயிரோட்டமான இணைப்பாக உள்ளீர்கள்” என அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார். சவுதியின் வேகமான பொருளாதார மாற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கும் புதிய வாய்ப்புகளை இந்தியர்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களது அறிவு, திறமை, தொழில்முனைவு மற்றும் அனுபவம் மூலம் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்னதாக இந்தியா வந்தபோது, சவுதியில் வாழும் இந்தியர்களை “குடும்பத்தைப் போன்றவர்கள்” எனக் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்த அன்புறவை தொடர்ந்து காக்க வேண்டும் என்றார். இந்திய சமூகத்தின் நேர்மை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் இந்திய அரசு உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அவசர நிலைகள் மற்றும் மோதல் சூழல்களில் மாணவர்கள், தொழிலாளர்கள், குடும்பங்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் தாயகம் அழைத்து வரவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்திய சமூகத்தின் முக்கிய கோரிக்கைகள்

சவுதியின் கிழக்கு மாகாணத்தில் இந்திய துணைத் தூதரகம் அமைத்தல், ரியாத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் வாராணசி, கோரக்பூர், ஆசம்கர் உள்ளிட்ட கிழக்கு உத்தரப்பிரதேச நகரங்களுக்கும் நேரடி விமான சேவைகள் தொடங்குதல், கூடுதல் தூதரக ஊழியர்களை நியமித்தல், வேலை இழந்த இந்தியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் பெற்று தரும் வகையில் வேலைவாய்ப்பு தளம் உருவாக்குதல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிப்பு முன்பதிவில் நிலவும் தாமதத்தை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் இந்திய துணைத் தூதரகம் அமைப்பதற்கான நீண்ட கால கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். நேரடி சர்வதேச விமான சேவைகள் தொடங்குவது விமான நிறுவனங்களின் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளையும் பொறுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஸ்போர்ட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தவும் காத்திருப்பு காலத்தை குறைக்கவும் இந்திய தூதரகம் VFS Global உடன் இணைந்து செயல்பட்டு வருவதாக சவுதிக்கான மேதகு இந்திய தூதர் திரு. விபுல் தெரிவித்தார்.

வரவேற்புரை ஆற்றிய தூதர், அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை அன்புடன் வரவேற்றதோடு, இந்திய சமூகத்தின் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற சிறப்பான பண்பையும் பாராட்டினார். அகில இந்திய வழிகாட்டல் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு சைகம் கான், பாரதிய சம்மான் விருது பெற்ற திரு ஷிஹாப் குட்டுக்காடு மற்றும் டாக்டர் அன்வர் குர்ஷித் ஆகியோருடன் இணைந்து அமைச்சருக்கு மலர்க்கொத்து வழங்கி கௌரவித்தார்.

IISR மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பை சேர்த்தன. பள்ளியின் இடைக்கால முதல்வர் திருமதி மைமூனா அப்பாஸ் நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார். திருமதி தரணம் ஆசிப் தொகுத்து வழங்கினார்.

நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ரியாத் வந்த அமைச்சர், இந்திய தொழிலாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்தார். அல்ஃபனார் நிறுவனத்தின் தொழிலாளர் முகாமை பார்வையிட்டு, அங்குள்ள இந்திய தொழிலாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்திய சமூகத்தினருடன் மிகுந்த எளிமையுடன் அன்புடனும் பழகிய அமைச்சர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உடன் புகைப்படங்கள் செல்ஃபிகள் எடுத்துக்கொண்டார். அவரது எளிமையான, அணுகக்கூடிய மற்றும் அன்பான அணுகுமுறை அவரை “மக்கள் அமைச்சர்” என்ற பாராட்டைப் பெறச் செய்தது.

இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் அகில இந்திய ஸ்டீரிங் கமிட்டி ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் சவுதியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்திய சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமூகத்தின் குறைகளைக் கவனமாகக் கேட்டறிந்ததுடன், இந்தியா–சவுதி அரேபியா இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் உறுதியையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

எம். சிராஜ்