⬅ Back to Main Page
Profile Posted by: M Siraj
Other 📍 State: Tamil Nadu 📅 24-08-2026 🕒 06:36 AM 👁️ 87 Views

நஜ்ரானில் உயிரிழந்த தமிழரின் உடல், அரசு செலவில் தாயகம் கொண்டு வரப்பட்டது.

Featured News Image

நஜ்ரான்: சவுதி அரேபியாவின் நஜ்ரானில் உயிரிழந்த கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, வெண்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் பெரியசாமியின் உடல், பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்திய அரசின் செலவில் தாயகம் கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News Image

கடந்த ஜூலை 10, 2026 அன்று நஜ்ரானில் ஈஸ்வரன் பெரியசாமி உயிரிழந்தார். அவரது உடலை தாயகம் கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தமிழக அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திடம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராஜசேகரன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளையின் தலைவர் நெல்லை அ. அப்துல் வாஹித் மற்றும் சவூதி ஒருங்கிணைப்பாளர் எம். திவான், ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அசீர் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர், யுனைடெட் தமிழ் சங்கம் சவுதி அரேபியா துணைச் செயலாளர் முனைவர் நூஹ் அப்துல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில், முனைவர் நூஹ் அப்துல்லாஹ் ஜெத்தா இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் சட்ட ரீதியான நடைமுறைகள் குறித்து ஆலோசித்து, நஜ்ரான் CCW தன்னார்வலர் சலீம் மூலம் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதன் மூலம் ஈஸ்வரனின் உடல் இந்திய அரசின் செலவில் தாயகம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் 22 அன்று மாலை 4 மணியளவில் ஈஸ்வரனின் உடல் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. அங்கு தவெக மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்க நிர்வாகிகள் உடலைப் பெற்று, அவரது குடும்பத்தினரிடம் மரியாதையுடன் ஒப்படைத்தனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த தமிழர் உடலை தாயகம் கொண்டு வர பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் மேற்கொண்ட இந்த மனிதநேய முயற்சிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

M Siraj